செம்பரப்பாக்கம் ஏரி திறப்பு குறித்து சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்.
கடந்த மாதம் சென்னையில் பெய்த கனமழையின் போது செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சென்னை நகரமே இரண்டு நாட்கள் மூழ்கியது. இந்த வெள்ளத்தினால் பொதுமக்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பணம், பொருட்கள் வீணாகியது. முன் அறிவிப்பு இன்றி செம்பரப்பாக்கம் ஏரியை தமிழக அரசு எவ்வித திட்டமிடலும் இன்றி திறந்துவிட்டதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து திமுக உறுப்பினர் அன்பழகன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. ஏரியில் இருந்து அதிகபட்சமாக 33,060 கனஅடி மட்டுமே திறக்க முடியும். வெள்ள நீர் ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி 2 அடி குறைவாகவே நீர் தேக்கி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் ஏரியில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்படவில்லை. தேர்தலை மனதில் வைத்து திமுகவினர் தவறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்” என்று விளக்கம் அளித்தார்.
முன்னதாக இன்று சட்டமன்றம் கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டு இரண்டு நிமிட நேர மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு முக்கியமான இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு பெரும் மழையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் ,மறைந்த பழம் பெரும் நடிகை மனோரமா மற்றும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சையத், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் ஆகியவர்களுக்கு தமிழக சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் நாளை மறுநாள் வரை நடைபெறும்.