சீன விமான நிலையத்தில் ஒபாமாவுக்கு அவமதிப்பா?
சமீபத்தில் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவை சீனா விமான நிலையத்தில் அவமதித்துவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை சீன அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சீன விமான நிலையத்தில் ஒபாமாவின் விமானம் வந்தபோது, விமானத்தில் இருந்து இறங்குவதற்கு வசதியாக, படிக்கட்டுகளுடன் கூடிய நகரும் ஏணி வசதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த ஏணி, மற்ற நாட்டு தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட சாதாரண ஏணி என்றும், இதனால் ஒபாமாவை சீனா அவமதித்து விட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் விளக்கம் அளித்தபோது, ‘மற்ற நாட்டு தலைவர்கள் எல்லாம் நாங்கள் அளித்த நகரும் ஏணியை பயன்படுத்தினர். அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? நாங்கள் வேண்டுமென்றே பிரச்சினையை உண்டாக்கவில்லை. எங்களது ஏற்பாடுகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், இந்த சம்பவமே ஏற்பட்டு இருக்காது. அதுபோல், அமெரிக்க பத்திரிகையாளர்களும் சீன விதிமுறைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர்’ என்று கூறினார்.