அக்டோபர் 31. உலக சிக்கன தின சிறப்பு கட்டுரை
சிக்கன தினத்திற்கான யோசனை வர முக்கிய காரணம், பொருளாதார வகையில் ஒரு நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணம்தான். 1921-ல் முதன்முறையாக ஸ்பெய்ன் நாட்டினர் இத்தினத்தை கொண்டாடினர். அதன்பின்னர் சிக்கனத்தை மக்களுக்கு உணர்த்துவது எந்த அளவிற்கு நாட்டிற்கும், உலகமயமாதலிற்கும் முக்கியம் என்பதை அறிந்து ஜெர்மனி, ஆஸ்திரேலியா என இன்னபிற நாட்டினரும் தங்கள் மக்களுக்கு இத்தினத்தினை அறிமுகப்படுத்தினர். உலக சிக்கன தினம் அக்டோபர் 31-ம் தேதி என்றபோதிலும், இந்தியாவை பொறுத்த வரையில் இத்தினம் அக்டோபர் 30-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. சில நாடுகளைத் தவிர்த்து மீதியுள்ள நாடுகளில் எல்லாம் இத்தினம் பொது விடுமுறையாகும். அன்றைய தினம், வங்கிகள் மட்டும் செயல்படும். மக்கள் அத்தினத்தின் முக்கியத்துவத்தை அறிந்து சேமிப்பு குறித்த சிக்கன முறைகளில் தெளிவடைய வேண்டும், தெளிவடைவார்கள் என்பதற்காகத் தான் அவர்களுக்கு இந்த பொது விடுமுறை.
எதற்காக சிக்கன தினம் தெரியுமா?
கடந்த 1924-ம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு நடைபெற்றது. உலகின் பல சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் அனைவரும் சிக்கனத்தை அறிய வேண்டுமென, உலக சிக்கன தினம் என ஒரு தினம் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது. நேற்றுதான் தீபாவளி முடிந்துள்ளது, இப்போதுதான் தீபாவளி செலவெல்லாம் முடிந்திருக்கிறது என்கிறீர்களா? சேமிப்பு, சிக்கனம் போன்றவைபற்றி மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பதே இத்தினம் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய நோக்கமாகும்.
பணத்தட்டுப்பாட்டுக்கு மட்டுமல்ல சிக்கனத்தேவை!
ஊரில் பெரியவர்கள் ‘சிறுக கட்டி பெருக வாழ்’ என ஒரு பழமொழி கூறுவார்கள்…. சேமிப்புப் பழக்கத்தை குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கும் நோக்கில் அன்றே நம் முன்னோர் கூறி வைத்த பழமொழி இது. சேமிப்பின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்வது வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியமான ஒன்று. தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பும் சிக்கனமும் எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு நாட்டின் முன்னேற்றத்துக்கு அது முக்கியம். நவீன பொருளாதாரமுறை நம்மிடையே சிக்கனத்துக்கான எண்ணத்தையும், சேமிப்பிற்கான அறிவையும் தூண்டுகிறது. சிக்கனம் என்பதை பணசேமிப்பு என்பதையும் தாண்டி, பல வகையான சிக்கன தேவைகள் இருப்பதை காணலாம். உதாரணமாக தண்ணீரில் சிக்கனம், எரிபொருள் சிக்கனம், உணவு வகைகளில் சிக்கனம், மின்சாரத்தில் சிக்கனம் என பலதுறைகளும் சிக்கனம் என்ற வார்த்தைக்கும் அடங்கி விடுகிறது.
எது சிக்கனம் தெரியுமா?
சிக்கனமாய் இருத்தல் என்பதற்கு உணவு உண்ணாமல், தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளாமல் இருப்பது என பொருள் அல்ல. ஒருமுறை காமராஜர், “தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் திருடன்” என்று குறிப்பிட்டார். சிக்கன வாழ்வுக்கான சிறந்த எடுத்துக்காட்டு அவரது வாழ்வு. அவசிய, அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி மீதியை சேமித்து வைத்தல்தான் சிக்கனம். நமது சிக்கனம் பிறரின் பசியைப் போக்கும் வல்லமை கொண்டது…. இன்றைய நிலையில் பழமொழிகளைத் தாண்டி பாடவடிவில் அரசாங்கமே சிக்கனம் குறித்த வகுப்புகளையும், அறிவுறைகளையும் பாடத்திட்டதிலேயே கற்றுத்தருகின்றது.
வீட்டையும் நாட்டையும் காக்கும் சிக்கனம்:
சேமிப்பு, சிக்கனம் என்னும் பகுத்தறிவுகளெல்லாம் தனிப்பட்ட முறையில் நம் வாழ்க்கையோடு நிறுத்திவிடாமல், உலகில் தட்டுப்பாடுகளோடு இருப்பவர்களின் நிலைப்பாடுகளை அறிந்து தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முதன்மைப்படுத்தப் படவேண்டியது அவசியம்…. வாழ்வில் எப்பொழுதுமே சிக்கனத்தை முதன்மையானதாக வைத்திருக்க வேண்டும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் நீர், நிலம், உணவு, எரிபொருள், மின்சாரம் என சிறுசிறு விஷயங்களில் நமது சிக்கனத்தை காண்பிப்போமே!. நம் சிக்கனம், உலகத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்…. ஆம், “சிக்கனம் வீட்டையும், சேமிப்பு நாட்டையும் காக்கும்”