ஒடிசாவில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

ஒடிசாவில் புயல் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. நதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரை தேடும் பணி தொடங்கியுள்ளது. இதில் ஒரு சிறுவனும் அடங்குவான். இதனால் வெள்ளத்தால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சிறப்பு நிவாரணமுகாம் கண்காணிப்பாளர் பி.கே.மகாபத்ரா கூறியதாவது: கடும் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆகி உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேரை காணவில்லை. வெள்ளத்தால் படுகாயமுற்றவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இப்புயலால் ஒடிசாவின் அனைத்து மாவட்டங்களிலும் கடும் மழை பெய்துவருகிறது. மழையினால் மாநிலத்தின் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  மருத்துவமனைக்கும், சிறப்பு நிவாரணமுகாமுக்கும் அனுப்பப்படுகின்றனர். சுவர் இடிந்ததாலும் மரங்கள் விழுந்ததால் படுகாயமுற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்ராக் மற்றும் மயூர்பன்ஞ்ச் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பொருட்சேதமும் உயிர்சேதமும் அதிகம் ஏற்பட்டுள்ளது. மாநிலமுதல்வர் நவீன் பட்நாயக் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்டார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply