உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: 1167 மதுபான கடைகள் ஒடிசாவில் மூடல்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் ஒரே ஒரு உத்தரவு நாட்டின் பல மாநிலங்களின் வருமானத்திற்கு வேட்டு வைத்துள்ளது
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை ஊருக்குள் மாற்றுவதில் நடைமுறை சிக்கல் அதிகம் உள்ளது. குறிப்பாக சரியான இடம் கிடைக்க வேண்டும். ஏற்கனவே பள்ளி, கல்லூரி, மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே மதுக்கடை இருக்கக்கூடாது என்ற உத்தரவும் இருப்பதால் இவை இல்லாத இடத்தில் மதுக்கடைகளுக்கு இடம் கிடைப்பது அரிதாகவே உள்ளது. மேலும் மதுக்கடைகளுக்கு இடம் கொடுக்க உரிமையாளர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 3000 மதுக்கடைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ள நிலையில் 1,167 மதுபான நிலையங்களை ஒடிசா அரசு கடந்த மார்ச் 31-ம் தேதி மூடியுள்ளது. ஓட்டல்கள், ரெஸ்டாரெண்ட்டுகள் மற்றும் ஒரு மிலிட்டரி கேண்டீனில் இயங்கி வந்த மதுக்கடைகள் உட்பட மொத்தம் 1,167 கடைகளை ஒடிசா அரசு மூடச்செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 1200 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கலால் துறை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.