இந்தியாவின் முக்கிய ஏவுகணை தீவுக்கு அப்துல்கலாம் பெயர்.
இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக விளங்கிய முன்னாள குடியரசு தலைவர் அப்துல்கலாம் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் அஞ்சலி செலுத்தி அவர் மேல் இருந்த மரியாதையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் பல பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் அப்துல்கலாம் பெயரை வைத்து அவருக்கு மரியாதை செலுத்தி வரும் நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஏவுகணை சோதனை மையம் அமைந்துள்ள வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலாசூர் அருகே உள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயரை ஓடிசா மாநில அரசு சூட்டியுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது. மாநில தலைநகர் புவனேஷ்வரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள இந்த தீவு இனிமேல் அப்துல் கலாம் தீவு என்றே அழைக்கப்படும். வீலர் தீவு இந்தியாவின் மிகவும் முக்கியமான ஏவுகணை ஏவும்தளம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏவுகணைகளின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பெயரை இந்த வீலர் தீவுக்கு சூட்டுவதில் பெருமை கொள்வதாக ஒடிஷா அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் டில்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையும் அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.