இமெயில் என்றவுடன் அவற்றின் மூலம் வந்து சேரும் குப்பை ( ஸ்பேம்) மெயில்களும் சேர்த்தே நினைவுக்கு வரும். தகவல் தொடர்புக்கு அருமையான வழியாக விளங்கும் இமெயிலுக்குக் களங்கமாக அமைந்திருக்கும் குப்பை மெயில்களின் வரத்து இப்போது குறைந்திருக்கிறது.
சைபர் பாதுகாப்பு நிறுவனமான சைமண்டெக் வெளியிட்டுள்ள தகவலின் படி ஜூன் மாதம் இணையத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்ட மெயில்களில் குப்பை மெயில்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது.
கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக இப்படிக் குப்பை மெயில்களின் எண்ணிக்கை நல்ல மெயில்களின் எண்ணிக்கையைவிடக் குறைந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இணையப் பயன்பாட்டில் இது நிச்சயம் நல்லதொரு மைல்கல்தான்.
குப்பை மெயில்களுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கை உள்ளிடவை இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து குப்பை மெயில்களே இல்லாத நிலை வரட்டும்!