பழங்கால் கார் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி சென்னையில் வரும் 24-ந்தேதி நடக்கவுள்ளது. சென்னை மக்கள் இந்த கார் அணி வகுப்புக்கு பெரும் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புவதாக கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை ஒன்பது மணி முதல் பாரம்பரியமிக்க பழைய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சி ஒன்று நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியை ‘‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்’’ ஏற்பாடு செய்துள்ளது.
அசோக் லைலாண்ட் நிர்வாக இயக்குநர் வினோத் தாசரி இந்த கண்காட்சியை கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாகவும் சிறப்பு விருந்தினராக டி.வி.எஸ்.நிறுவனத்தின் நிர்வாக இணை இயக்குநர் ஆர்.தினேஷ் கலந்துகொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சிறப்புமிகுந்த கண்காட்சியில், 1920-ம் ஆண்டு முதல் 1980 வரை தயாரான பல்வேறு நிறுவனங்களின் மாடல்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கார்களும், 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் இடம் பெறவுள்ளது. இந்த கண்காட்சியில் பங்கு பெறும் கார்களில் சிறந்த கார் ஒன்றை தேர்ந்தெடுக்க கொல்கத்தாவை சேர்ந்த ராஜா முகர்ஜி, பார்த்தா பானிக் ஆகியோர்கள் வருகை தரவுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட சிறந்த கார்களுக்கு ‘ஸ்கோடா இண்டியா லிமிடெட்’ நிர்வாக இயக்குநர் சுதிர்ராவ் பரிசு வழங்குகிறார். இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.