மீண்டும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியா? ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சிஷ்யர் உடைக்கும் ரகசியம்
பிரபல ஆன்மீகவாதியும், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆன்மீக ரீதியிலான ‘ருத்ர’ பூஜைக்கான பயணம் இது என்று மேலோட்டமாக சொல்லப்பட்டாலும் இந்த பயணத்தின் பின்னணியில் அரசியல் இருப்பதாக பலர் கருதுகின்றனர்.
மேலும் தமிழகத் தலைவர்களின் மனதில் என்ன இருக்கின்றது? யார் யார் எந்த கூட்டணியில் இருப்பார்கள் என்பதை அறிந்து மோடியிடம் அவர் சொல்வதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சுவாமிஜிக்கு ஒருவரின் கண்களை பார்த்ததும் அவருடைய உள்மனதை அறிந்து கொள்ளும் சக்தி இருப்பதாகவும், இந்த சக்தியின் அடிப்படையில்தான் அவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ உள்பட பலர் அரசியல் தலைவர்களை சந்தித்து அவர்களுடைய மன ஓட்டத்தை அறிந்து அதை மோடியிடம் கூறவுள்ளதாகவும் அவருடைய சிஷ்யர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாக சுவாமிஜியின் சிஷ்யர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிமுகவும், தேமுதிகவும் கடந்த சில வருடங்களாக எதிர்க்கட்சிகள் போல் இல்லாமல் எதிரிக்கட்சிகள் போல் இருந்து வரும் நிலையில் இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வியை எழுப்பிய போது, சமீபத்தில் அதிமுக அரசையோ அல்லது ஜெயலலிதாவை விமர்சனம் செய்து தேமுதிகவிடம் ஒரு அறிக்கையும் வரவில்லை என்றும், இனிமேலும் வர வாய்ப்பில்லை என்றும், சுவாஜியை சந்தித்த பின்னர் விஜயகாந்திடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சிஷ்யர் கூறியுள்ளார்.