சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளை அவ்வப்போது நிர்ணயம் செய்து வரும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 1ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை கடுமையாக ஏற்றியதன் பாதிப்பையே இன்னும் தாங்க முடியாத நிலையில் இருக்கும் நடுத்தர மக்களுக்கு மீண்டும் ஒரு பேரிடி செய்தியாக இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.3.13ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.71ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதியும் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3.96ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.37ம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்த மாதத்தில் மட்டுமே பெட்ரோல் விலையை ரூ. 7.10 காசும், டீசல் விலையை ரூ. 5.10 காசும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. மேலும் கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலையை ரூ. 15.5 காசும், டீசல் விலையை ரூ. 11.15 காசும் உயர்த்தி இருப்பதால் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விலையேற்றத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.