நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்: தேர்தல் கமிஷன் ஆலோசனை

நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்: தேர்தல் கமிஷன் ஆலோசனை

இந்தியா விடுதலை அடைந்த பின்னர் கடந்த 1952-ம் ஆண்டு மட்டும் நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில் ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ குறித்து தேர்தல் கமிஷனும், மத்திய சட்டத்துறை அமைச்சகமும் மே 16 ம் தேதி ஆலோசனை நடத்துகிறது.

பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் அதிக செலவு மற்றும் அதிக ஊழியர்களின் உழைப்பு தேவைப்படுகிறது. எனவே பாராளுமன்றத்திற்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் வாக்குப்பதிவை நடத்தினால் தேர்தல் செலவை பெருமளவில் குறைக்கமுடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற யோசனையை பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

தற்போதைய 16-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தியாக வேண்டும். ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற யோசனை தற்போது ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது.

மாநில சட்டசபை தேர்தல்களுடன் சேர்த்து, பாராளுமன்ற தேர்தலையும் நடத்துவது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனும், மத்திய சட்டத்துறை அமைச்சகமும் மே 16 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளன.

இந்த ஆலோசனை தொடர்பான அறிக்கையை, சட்ட குழு ஜூலை மாதம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இந்த அறிக்கை தொடர்பான ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு, ஒரே சமயத்தில் மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது.

Leave a Reply