மதிமுகவில் இருந்து மேலும் ஒரு தலைவர் விலகல். வைகோ அதிர்ச்சி
காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் பாலவாக்கம் சோமு மற்றும் சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் கு.சீ.வெ. தாமரைக்கண்ணன், துணை செயலாளர் எஸ்.வி.ராஜேந்திரன், உள்பட பலர் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதிமுக பொருளாளர் மாசிலாமணியும் மதிமுகவில் இருந்து விலகியதால் மதிமுக கூடாரம் காலியாவதாக கூறப்பட்டது. மதிமுகவை உடைக்க கருணாநிதி சதி செய்வதாக வைகோ குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் மதிமுகவை உடைக்க நினைத்திருந்தால் எப்போதோ உடைத்திருப்போம் என பதிலளித்தார்.
இந்நிலையில் மதுரை புறநகர் மாவட்ட மதிமுக முன்னாள் செயலர் மருத்துவர் சரவணன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் வைகோ உள்பட மதிமுகவின் முக்கிய தலைவர்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. வைகோவின் நடவடிக்கைகளால் மதிமுக தொண்டர்கள் சோர்வடைந்து விட்டதாக பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் சரவணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து வைகோ சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, மதிமுகவை நசுக்க திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
திமுக கூட்டணியில் மதிமுக சேராது என்று கூறியதில் இருந்து மதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.