ஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின். சாதனை செய்த கோவை தொழிலதிபர்

p12ஒரு ரூபாய்க்கு நாப்கின் தயாரிக்கும் முயற்சி செய்து வெற்றியடைந்தது என்னோட உழைப்புனா, இன்னிக்கு இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், உலகெங்கும் 29 நாடுகளுக்கும் நான் பயணிச்சு, ஒரு தொழில்முனைவோரா மட்டு மில்லாம, பெண்களுக்கான சுகாதார வழி காட்டியாவும் இடைவிடாம இயங்கி வருகிறது கோயம்புத்தூர், ‘ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ், என்கிறார் உரிமையாளர் முருகானந்தம்.

தற்போது தன் துறையில் ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டேயிருக்கும் முருகானந்தம், ”95 சதவிகித இந்தியப் பெண்கள் சுகாதாரமான நாப்கின்களைப் பயன்படுத்துவதில்லைனு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. கடந்த சில ஆண்டுகளா தமிழகத்தில் இதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்திய நான், இப்போ வடஇந்தியாவுல செய்துட்டிருக்கேன். என்னுடைய கண்டுபிடிப்பில் உருவான நாப்கின் தயாரிக்கும் மெஷின்கள், இப்போ இந்தியா முழுக்க 2,000 எண்ணிக்கையில இயங்கிட்டு இருக்கு. 8 மில்லியன் பெண்களை சுகாதாரமான நாப்கின் பயன்படுத்த வெச்சிருக்கேன்.

2005-ல ஐ.ஐ.டி-யில ‘சமுதாய மேம்பாட்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பு’க்காக முதல் பரிசு வாங்கினேன். அமெரிக்காவின் ஹார்வர்டு யுனிவர்சிட்டியும் என்னை அழைச்சிருந்தாங்க. நான் பவர்பாயின்ட் பிரசன்டேஷன் கொடுக்கும்போது, பெண்களைப் பொறுத்தவரைக்கும் என்ன பேசப்போறேம்ங்கிறதை ஆரம்பித்திலேயே புரிஞ்சுப்பாங்க. கடைசிவரைக்கும் ஆண்களுக்குப் புரியாது.

இப்படித்தான் ஒருத்தர், ‘முருகானந்தம், ஏன் நாப்கினை வெள்ளை கலர்ல தயாரிக்கிறீங்க? ரெட், யெல்லோ, புளூனு கலர்கலரா தயாரிக்கலாம்ல?’னு கேட்டாரு. எனக்கு தூக்கிவாரிப் போட்டுருச்சு… இந்த அளவுக்குக் கூடவா தெரியாம இருப்பாங்கனு! இத்தனைக்கும் அப்படிக் கேட்டவர் ஒரு பல்கலைக்கழகத்தோட துணைவேந்தர். பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்துல, ஆண்கள் எவ்வளவு அறியாமையோட இருக்காங்கனு புரிஞ்சுது. அந்தக் காலத்துல சாம்பல், மரத்தூள், பேப்பர் இதையெல்லாம் மாதவிடாய் நாட்கள்ல பயன்படுத்தியிருக்கும் பெண்களோட சிரமங்கள், எந்த யுகத்திலும் பல ஆண்களுக்குப் புரியப்போறதில்ல.

பெண்களோட பிரச்னை பற்றிய அக்கறையான புரிதலோடு இந்தத் தொழிலை செய்றதாலதான், என்னால வெற்றியடைய முடிஞ்சுது. மாதவிடாய் நாட்கள்ல, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வகையான நாப்கின் தேவைப்படும். சிலருக்கு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு மாதிரியும், மீத நாட்களுக்கு வேற மாதிரியும், சிலருக்கு ஏழு நாட்களுக்கும் ஒரே மாதிரியும்னு, அவங்களோட நாப்கின் தேவை வேறுபடும். அதுக்கு தகுந்தமாதிரி நாப்கின் பாக்கெட்டை உருவாக்கினேன். பல பெண்கள் நன்றியும் பாராட்டும் சொன்னாங்க.

நான் கண்டுபிடிச்ச எந்திரங்கள் மூலமா நாப்கின்களைத் தயாரிக்கிறவங்க முழுக்க முழுக்க பெண்கள்தான். நாப்கின் பற்றிய குறையைப் பெண்கள் தயக்கம் இல்லாம சொல்றதுக்காக செய்த ஏற்பாடு அது. ‘தன் வீட்டுல இருந்து ஒரு தக்காளியையோ, வெங்காயத்தையோ கொடுத்துட்டு, பக்கத்து வீட்டுப் பொண்ணுகிட்ட இருந்து ஒரு நாப்கினை வாங்கிக்கிறாங்க. அந்தளவுக்கு குறைந்த விலையில் நாப்கின் தயாரிச்சு வழங்குறோம்’னு அமெரிக்காவுல சொன்னப்போ, கைதட்டல் அடங்க ரொம்ப நேரமாச்சு.

இதைத் தொழிலா கையில் எடுத்து வீட்டில் இருந்து செய்தா… மாதம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வருமானம் பெறலாம். நாளண்ணுக்கு 1,000 – 1,500 நாப்கின்கள் தயாரிக்கலாம். ஒரு நாப்கின் மெஷின், ஒரு லட்சம் முதல் மூணு லட்சம் வரை விற்பனை ஆகுது” என்று சொன்னார் முருகானந்தம்.

Leave a Reply