தமிழகத்தில் நேற்று முன் தினம் மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து நேற்றும் ஒரு அமைச்சர் பதவியிழந்துள்ளார். பதவியிழந்த நான்காவது அமைச்சர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.முனுசாமி. இவர் மீது கட்சியின் தொண்டர்கள் அளித்த புகாரின் பேரில் அவர் அமைச்சர் பதவியை இழந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை கே.பி.முனுசாமியை பதவியில் இருந்து நீக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கவர்னர் ரோசையா முனுசாமியை அமைச்சரவையில் இருந்து நீக்கஉத்தரவிட்டுள்ளார்.
முனுசாமி வகித்து வந்த துறையை அமைச்சர் மோகன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கே.பி.முனுசாமி வகித்து வந்த அ.தி.மு.க.அ. கட்சிப் பதவியான ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். தற்போது முனுசாமி எவ்வித பொறுப்பிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.