வெங்காயத்தால் உயர்ந்த பணவீக்கம்

உணவுப் பொருள்கள், குறிப்பாக வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக, செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. தொடர்ந்து நான்கு மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ஜூலை மாதத்தில் பணவீக்க விகிதம் 5.85 சதவீதமாகவும் ஆகஸ்ட் மாத பணவீக்க விகிதம் 6.1 சதவீதமாகவும் இருந்தது. செப்டம்பரில் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் வெங்காயத்தின் விலை கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்ததைவிட, 323 சதவீதம் அதிகரித்தது. ஆண்டுவிகிதத்தில் நோக்கும்போது, காய்கறிகளின் விலை 89 சதவீதம் அதிகரித்தது. பழங்களின் விலை 54 சதவீதம் அதிகரித்தது. உணவுப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பணவீக்கம் குறையாமல், அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆறு சதவீதத்துக்கும் மேல் பணவீக்க விகிதம் என்பது மிக அதிகம் என்றும் அது நல்ல செய்தியல்ல என்றும் திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார். ஆயினும், அதிக அளவில் அரசு கைவசமுள்ள உணவுப் பொருள்களை சந்தையில் வெளியிடுவதன் மூலம், அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்று தான் நம்புவதாக கருத்து தெரிவித்தார்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வழியாக அளிக்கப்படும் ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு ஆகியவற்றினால் உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் இரண்டாம் காலாண்டு வட்டி விகித மறு ஆய்வு அக்டோபர் 29-ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், பணவீக்க அதிகரிப்பு புள்ளிவிவரம் வெளியிடப்பட்டிருக்கிறது. பொருளாதார தேக்க நிலையைப் போக்கவும் உற்பத்தியை ஊக்குவிக்கவும் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தொழிலக, வர்த்தக சபைகள் கோரிக்கை வைத்துவருகின்றன. ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு என்ற கருத்து இப்போது எழுந்துள்ளது. ஆனால், வட்டி விகிதத்தை கடுமையாக்கினால் அது விலைவாசியை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும் என்று வர்த்தக சபைகளின் சங்கமான அசோசேம் தலைமை இயக்குநர் டி.எஸ்.ராவத் கூறினார்.

Leave a Reply