இன்று பெரும்பாலான ஏழைகள், நடுத்தர மக்கள் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடுவதும், உயர்தட்டு மக்கள் முந்திரியை நெய்யில் வறுத்து சாப்பிடுவதும், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’தானே. கொழுப்புச் சத்து நிறைந்த பருப்பு வகைகளை அதிக அளவில் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே நட்ஸ் வகைகளை அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியம்.
‘நாள் ஒன்றுக்கு 30 கிராம் நட்ஸ் உடலுக்குத் தேவை. அதிலும் உணவில் நெய், பருப்பு, எண்ணெய் இவற்றை அதிகம் சேர்த்துக்கொள்பவர்கள், நட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. எல்லா வகை நட்ஸையும் கலந்து 30 கிராம் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்’ என்கிறார் சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.
வேர்க்கடலை
கோலின், புரதம், கொழுப்பு, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என சத்துக்கள் அதிகம் உண்டு. மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
வளரும் குழந்தைகள், உடல் மெலிந்தவர்கள், கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.
சைவம் சாப்பிடுபவர்கள் 30 கிராமும், அசைவம் சாப்பிடுபவர்கள் 20 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்களுக்கு 15 கிராம் போதுமானது.
பச்சை வேர்க்கடலை ஜீரணம் ஆகாது. வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம்.
வேர்க்கடலையில் முளைவிட்ட பகுதி கருப்பாக இருந்தால், அதில் நச்சுக்கள் அதிகம் இருக்கும். அதை அப்படியே வேகவைத்துச் சாப்பிடும்போது, கல்லீரல் பாதிக்கக்கூடும். இதனால் வேர்க்கடலையை ஓடுடன் வாங்குவதைவிட, உடைத்துவைத்ததை வாங்குவது நல்லது.
பாதாம்
கெட்டக் கொழுப்பைக் குறைக்கக்கூடிய ஆற்றல் இதற்கு அதிகம். புரதம், கொழுப்பு என நிறைய சத்துக்கள் இதில் உள்ளன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் 5 பாதாம் சாப்பிடலாம்.
பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், எடை குறைந்தவர்கள் பாலுடன் கலந்து பருகலாம்.
சர்க்கரை நோயாளிகள் மட்டும் 2 பாதாமை இரவே வெந்நீரில் ஊறவைத்து மறுநாள் சாப்பிடலாம்.
அதிக எனர்ஜி தேவைப்படுபவர்கள், கூடுதலாகச் சாப்பிட்டாலும் தப்பில்லை.
முந்திரிப் பருப்பு
கொழுப்பு மிக அதிகமாக இருக்கிறது. வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் இருந்தாலும் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
வயதானவர்களுக்குத் தேவையே இல்லை. உடலுக்குப் புரதச் சத்து தேவைப்படுபவர்கள், உடல் எடை குறைந்தவர்கள், வளரும் பிள்ளைகள் தினமும் 3 சாப்பிடலாம்.
நெய்யில் வறுத்து சாப்பிடும்போது, உடலில் கொழுப்பு அதிகரித்து இதயப் பிரச்னையைக் கொண்டுவரும்.
இதய நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.
இதிலுள்ள சத்துக்கள் நம் அன்றாட இயற்கை உணவிலேயே இருப்பதால், பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.
பிஸ்தா
கொழுப்பு அதிகம். உடல் வளர்ச்சியைத் தரக்கூடிய புரதம், கால்சியம் மற்றும் தாது உப்புக்கள் இதில் இருப்பதால், நல்ல ஆற்றலைத் தரும்.
பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் மூன்று முதல் நான்கு பருப்புகள் எடுத்துக்கொள்ளலாம்.
அதிக எடை இருப்பவர்கள் எப்போதாவது ஒன்று இரண்டு சாப்பிடலாம்.
இதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
தினமும் சாப்பிட்டு வந்தால், சரும நோய் பாதிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அக்ரூட்
மீன்களில் அதிகமாக இருக்கும் ஒமேகா 3 என்ற கொழுப்பு இதில் அதிகமாக இருக்கிறது. ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் வாரம் 30 முதல் 35 கிராம் அளவில் சாப்பிடலாம்.
சைவ உணவு சாப்பிடுபவர்கள், இதய நோயாளிகள் தினமும் இரண்டு முதல் மூன்று பருப்புகள் சாப்பிடலாம். வாரம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
இதய நோயாளிகளுக்கு ஏற்ற பருப்பு இது.