உதகையில் ஓட்டல் அதிபர் ஒருவர் ரூ.24 லட்சம் ரூபாயை வங்கி ஒன்றில் நூதன மோசடி செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். அவரை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
உதகையில் சாய்பேலஸ் என்னும் ஓட்டலை நடத்திவரும் ஜெகதீஸ் குமார் என்பவர், அங்குள்ள எச்.டி.எப்.சி வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அடிக்கடி வங்கிக்கு வந்து மேலாளர் முதல் கேஷியர் வரை நெருங்கி பழகியதால் அடிக்கடி லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஒருசில மணி நேரங்களில் திருப்பிக்கொடுத்து வந்தார்.
ஜெகதீஷ்குமார் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்துவந்ததால் அவருக்கு இந்த உதவியை வங்கி அதிகாரிகள் செய்து வந்தனர். இதுபோலவே கடந்த திங்கட்கிழமை வங்கி கேஷியரிடம் வந்த ஜெகதீஷ்குமார் ரூ.24 லட்சம் தனக்கு அவசரமாக தேவைப்படுவதாகவும், ஒருமணி நேரத்தில் திருப்பி தந்துவிடுவதாகவும் கேட்டுள்ளார். கேஷியர், வங்கி மேனேஜரிடம் ஆலோசனை செய்து ரூ.24 லட்சத்தை கொடுத்துள்ளனர்.
ஆனால் இரண்டு மணி நேரம் ஆகியும் பணத்தை திருப்பிக்கொடுக்க ஜெகதீஷ்குமார் வராததால், சந்தேகம் அடைந்த வங்கி கேஷியர், ஓட்டலுக்கு சென்று பார்த்துள்ளார். ஓட்டலில் ஜெகதீஷ்குமார் இல்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி கேஷியரும் மேனேஜரும் உடனடியாக உதகை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஜெகதீஸ் குமார் இதே போல தனது நண்பர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தலைமறைவாகியுள்ள ஜெகதீஷ்குமாரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.