தமிழக அரசு பாலின் கொள்முதல் விலையை ரூ.10 வரை உயர்த்தியுள்ளதால், பாலின் சில்லறை விற்பனை விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஓட்டல்களில் டீ மற்றும் காபியின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் பால் விலை உயர்வுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி
ஆவின்பால் நிறுவனத்தில் நடைபெற்ற கோடிக்கணக்கான ஊழலை மறைத்து விட்டு, அந்த நஷ்டத்தை ஈடுகட்டவே தமிழக அரசு பால் விலையை உயர்த்தியுள்ளது. பால் விலை உயர்வை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும், இல்லையே திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படௌம்
ஞானதேசிகன்
“கொள்முதல் விலை ஏற்றத்தினைத் தவிர வேறு எந்த செலவும் அரசுக்கு ஏற்படப் போவதில்லை. எனவே, மக்களைப் பாதிக்கின்ற பால் விலை உயர்வை அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்”
தா. பாண்டியன்
உணவுப் பொருட்களின் மூலம் தமிழக அரசு லாபம் பெற நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழக அரசு முதலில் ஆவின் பால் திருடப்படுவதை தடுத்து நிர்வாகத்தை சீர்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழசை சவுந்தரராஜன்
பசும்பால் கொள் முதல் விலை 5 ரூபாய் எருமைப்பால் விலை 4 ரூபாய் என உயர்த்திவிட்டு சமன்படுத்தப்பட்ட பால் விலையை ரூ.10
ஏற்றியிருப்பது ஏற்க முடியாதது.
மிகக் குறைந்த அளவில் கொள்முதல் விலையை அதிகரித்து விட்டு – பாலின் விலைச்சுமையை ரூ.10 ஏற்றி அதை மக்கள் மீது சுமத்துவது எந்த வகையில் நியாயம்…..இப்படிப் பால் விலையை தனியார் நிறுவனங்களுக்கு போட்டி போட்டு விலையை ஏற்றினால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்…
எனவே அரசு லாப நோக்கில் செயல்படாமல் மக்களுக்கு சேவை நோக்கில் செயல்படவேண்டும். இல்லையென்றால் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுவது மட்டுமல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்.
ராமதாஸ்
”அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பால் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ. 19.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுவரை எந்த ஆட்சியிலும் மூன்றரை ஆண்டுகளில் பால் விலை இந்த அளவுக்கு மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டதில்லை. மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் போது அதை சமாளிப்பதற்காக விற்பனை விலையை லிட்டருக்கு ஒரு ரூபாயோ அல்லது இரண்டு ரூபாயோ உயர்த்துவதில் தவறில்லை. ஆனால், ஒரே தடவையில் லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தினால், தினமும் ஒரு லிட்டர் பாலை பயன்படுத்தும் குடும்பத்திற்கு மாதம் ரூ.300 கூடுதல் செலவாகும்; பாலுக்காக மட்டும் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ. 1350 வரை செலவிட வேண்டியிருக்கும். இதை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாது.
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பிறகு முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மக்களை பாதிக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும். ஒருவேளை ஜெயலலிதா ஆட்சியே பரவாயில்லை என்று மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே அவரது ஆட்சியில் இருந்ததைவிட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்த ஓ.பன்னீர்செல்வம் அரசு முடிவு செய்திருக்கிறதா? எனத் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், மக்களின் சுமையை உணர்ந்து பால் விற்பனை விலை உயர்வை தமிழக அரசு முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.