குற்றவாளி ஜெயலலிதா படம் சட்டப்பேரவையிலா? வலுக்கும் எதிர்ப்புகள்
நேற்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். துணை சபாநாயகர் தம்பிதுரையும் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க பிரதமர் வருகை தந்தால் மகிழ்ச்சி அடைவேன்’ என்று கூறினார்.
இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றவாளியான ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறியபோது, “உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை திறக்க பிரதமரை அழைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதா படத் திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரமாட்டார். அப்படி வந்தால் நீங்களுமா மோடி என அவருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி பீட்டர் அல்போன்ஸ் இதுகுறித்து கூறியபோது, “சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துப் பார்த்த யாரும் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் வைக்கப்படுவதை ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்கவில்லையே தவிர, மற்றபடி அவரும் குற்றவாளிதான். சட்டப்பேரவையில் அவரது படம் வைக்கப்படுவதை ஏற்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, “ஜெயலலிதா முன்னாள் முதல்வர் என்றாலும் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். மக்களுக்காக போராடி அவர் சிறை செல்லவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர். அவரது படத்தை சட்டப்பேரவையில் திறப்பது சரியல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்.