அதிமுகவின் 1% மட்டுமே கெளபாய் குள்ளனின் பக்கம்: ராஜகண்ணப்பன் குறிப்பிடுவது யாரை?
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அடுத்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் போட்டி போட்டு கொண்டு தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் புரட்சித் தலைவி அம்மா அணியினரின் கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: “இடுப்பு ஒடிந்து போன எடப்பாடியை வீழ்த்திக் காட்டிய கூட்டமிது. கூவம் பெல்லோசை வைத்துக்கொண்டு தலையில் கொண்டையைப் போட்டுக் கொண்டு தலைமைக் கழகத்துக்கு வந்து பந்தா காட்டினால் போதுமா? அ.தி.மு.க-வுக்குள் உள்ள 41% ஆதரவில் 40% ஓ.பி.எஸ் பக்கம் உள்ளது. ஒரு சதவிகிதம் மட்டுமே கெளபாய் குள்ளனின் பக்கம் உள்ளது. இந்த நிலையில், குள்ள நரிகளின் ஆட்டம் இங்கு செல்லாது” என்று கூறினார்.
இதே கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசியபோது, ‘ காஞ்சியில் தொடங்கி, 9-வது மாவட்டமாக இங்கு கூட்டம் நடக்கிறது. ஒவ்வொரு மாவட்ட நிகழ்ச்சியும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றாக கலந்தது ராமநாதபுரம் மண். ராவணனை அழிக்க ராமர் கால் பதித்த பூமி இது. கூனியின் சூழ்ச்சியால் ராமர் ஆட்சியை இழந்தார். சில சூழ்ச்சிகாரர்களின் சதியால் நாம் அம்மாவின் ஆட்சியை இழந்திருக்கிறோம். அதற்கு காரணமான நம் எதிரிகளை பழி வாங்க இங்கு சபதம் எடுப்போம்.
வறட்சி மாவட்டம் உங்கள் எழுச்சியால் புரட்சி மாவட்டமாக மாறியிருக்கிறது. நமது வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் தினம் ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்துக்கொண்டிருக்கிறார்கள். யாரைப் பார்த்து நான் சிரித்தேன் என குற்றம் சொன்னார்களோ அதே நபருடன் (ஸ்டாலின்) எடப்பாடி கூட்டணி வைத்து சட்டமன்றத்துக்குள் செயல்படுகிறார். தன்னை கொடுமைப்படுத்தி வேலை வாங்கும் முதலாளி ஒழுங்காக படிக்காத அவரது மகளை தனக்கு கட்டி வைப்பார் என கழுதை ஒன்று கனவு கண்டதாம். அதேபோலதான் தான் முதல்வராகி விடலாம் என ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். கழுதையின் கனவு போல் ஸ்டாலினின் கனவும் நிறைவேறப் போவதில்லை. நான் எடப்பாடியிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை வெளியேற்ற முடியுமா? முடியாதா? என் கேள்விக்கு எடப்பாடிதான் பதில் சொல்ல வேண்டும். செயல் வீரர் ஆலோசனை கூட்டம் மாநில மாநாடு போல் இங்கு நடக்கிறது. நாளை நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையையும், புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும் என்ற நம்பிக்கையும் இந்த கூட்டத்தின் மூலம் உறுதியாகி உள்ளது” என்று கூறினார்.