ஓபிஎஸ் அவர்களுக்கு குவிகிறது ஆதரவு. கட்சியை கைப்பற்றுவாரா?
தமிழக அரசியலில் இதுவரை சாதுவாக இருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று கொதித்து எழுந்ததால் அதிமுக தலைமை மிரண்டு போயுள்ளது. உண்மையான அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஓபிஎஸ் அவர்களுக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
முதலமைச்சராக நீடித்து வரும் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கபட்டாலும் அந்த கட்சியிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் மறைமுகமாக ஆதரித்து வருவதாகவும், விரைவில் வெளிப்படையான ஆதரவை அவர்கள் தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேற்று மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன், பரிதி இளம்வழுதி நேரில் சென்று சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பலரும் சந்தித்து வருவதாகவும், இதனால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூடிய விரைவில் கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் ஓபிஎஸ் கைப்பற்றுவார் என்று கூறப்படுகிறது.