உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேவை அதிகமாக இருக்கும் நிலையில் குறைந்த அளவிலான உறுப்புகளே கிடைக்கின்றன. ஆண்டுக்கு 2 லட்சம் கிட்னி தேவைப்படும் நிலையில் 6 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நாடா கூறினார்.
மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேர விவாவத்தின் போது இதை தெரிவித்த அமைச்சர், ஆண்டுக்கு 30,000 நுரையிரல் தேவைப்படும் நிலையில் 1,500 மட்டுமே கிடைக்கிறது.
இதேபோன்று இதயத்தை பொறுத்தவரையில் 50 ஆயிரத்துக்குப் பதில் 15 மட்டுமே கிடைக்கிறது என்றார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேவைக்கும் தற்போது கிடைப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.
இறக்கும் தருவாயில் உள்ள நபர்களிடமிருந்து நல்ல நிலையில் உள்ள உறுப்புகளை தானமாக பெறுவதற்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார் அமைச்சர்.
உறுப்பு தானத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
உறுப்பு தானம் குறித்த ஒருங்கிணைப்பாளர்களை மருத்துவமனைகளில் நியமிப்பதற்காக, தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
மண்டல அளவிலான உறுப்பு மாற்று மையங்களை நிறுவுவதற்காக தமிழ்நாடு, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், சண்டீகர் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ள என்றார் அமைச்சர்.