பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்காக ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்காக பள்ளியிலேயே பதிவுசெய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த மே 21ஆம் தேதி அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டது. அந்த மதிப்பெண் சான்றிதழ் உதவியுடன் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று (திங்கள்கிழமை) பள்ளிகளில் வழங்கப்படுகிறது.
காலை 10 மணி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தில் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) பதிவுசெய்யவும் பள்ளிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பதிவு முகாம் ஜூலை 4-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெவ்வேறு நாட்களில் பதிவுசெய்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஜூன் 4-ம் தேதியிட்ட பதிவுமூப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.