அ.தி.மு.கவை வழிநடத்தும் தகுதி எங்களுக்குதான் உள்ளது..! மார்தட்டும் ஒ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.கவை வழிநடத்தும் தகுதி எங்களது அணிக்குத்தான் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த நூற்றாண்டு விழா நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவர் ஆதரவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர்.
இன்று காலையில் திருச்சி விமான நிலையத்தில் கத்தியால் ஒருவர் குத்த வந்த தகவல் பரவியதால், இன்று இங்கு பொதுக்கூட்டம் நடக்குமா என்ற கேள்வி கட்சியினர் இடையே ஏற்பட்டிருந்தது. ‘அதெல்லாம் ஒன்றுமில்லை, திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும்’ என்று ஓ.பி.எஸ். உறுதி கூறியதால், அவர் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள், எம்.பி, முக்கிய நிர்வாகிகள் இல்லாவிட்டலும் மக்கள் கூட்டம் திரளாக இருந்தது. அந்தக்கூட்டத்தில் பேசிய ஒ.பன்னீர்செல்வம், ”ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் முதல்வராக இருந்தபோது கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க ஆந்திரா சென்று கோரிக்கை வைத்தேன். அ.தி.மு.க-வை தலைமையேற்று நடத்தும் தகுதி எங்களுக்குத்தான் உண்டு’ என்று தெரிவித்தார்.