பீகார் மாநிலத்தில் போலி பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் வேலைக்கு சேர்ந்த 1,100 பேர்களை பீகார் அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரத்திலும், கல்வியிலும் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருக்கும் பீகாரில், போலியான பட்டப்படிப்பு சான்றிதழ்களை கொடுத்து ஆசிரியர் பணியில் பலர் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் புதியதாக வேலைக்கு சேர்ந்த ஆசிரியர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் சர்பார்க்கப்பட்டன. இதில் 1100 ஆசிரியர்கள் அவர்களாகவே தயாரித்த போலி சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பீகார் மாநில கல்வி துறை உயர் அதிகாரி ஆர்.எஸ்.சிங் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ”போலி பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த 1,100 பேரை கண்டுபிடித்து வேலையைவிட்டு நீக்கியுள்ளோம். மேலும் பல ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்ககள் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட ஆசிரியர்களின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு போலி சான்றிதழ் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது” என்று கூறியுள்ளார்.