குளியல் அறையில் கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்த எஞ்சினியர். மே.வங்கத்தில் திடுக்கிடும் தகவல்
[carousel ids=”69971,69972,69973,69974″]
மேற்குவங்க மாநிலத்தில் மாதம் ரூ.45 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கு ஒரு எஞ்சினியர் தனது வீட்டின் படுக்கை அறை, குளியல் அறை, கழிப்பறை, தண்ணீர் தொட்டி ஆகிய இடங்களில் ரூ.24 கோடி பணத்தை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த எஞ்சினியரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில், ஹவுரா மாவட்டம், பாலி மாநகராட்சியில் பிரணாப் என்பவர் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மாத சம்பளம் ரூ.45 ஆயிரம் மட்டுமே. ஆனால் அவர் ஆடம்பர மாளிகையில் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரகசியமாக அவரை பின் தொடர்ந்து கடந்த சில நாட்களாக விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் பிரணாப் குறித்து கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் அண்மையில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் நேற்று முன்தினம் பாலியில் உள்ள பிரணாப் அதிகாரியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது அவரது வீட்டில் கட்டுகட்டாக கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரதான படுக்கை அறை, கழிப்பறை, குளியல் அறை ஆகியவற்றில் புத்தம்புது ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக புதைத்து வைக்கப்பட்டிருந்தும், மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியின் மேற்பரப்பில் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸாரின் தேடுதல் வேட்டையின்போது அவரது மனைவி திடீரென வெளியே ஓடிவந்து வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்துவிட்டதாக கூச்சலிட்டார். ஆனால் உள்ளூர் போலீஸாருக்கு விபரம் தெரியும் என்பதால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.
இந்த பரிசோதனை தொடர்ச்சியாக 21 மணி நேரம் நடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் வீட்டை சல்லடை போட்டு ஒரு இடம் விடாமல் தங்கள் தேடுதல் வேட்டையை நடத்தினர். கைப்பற்றப்பட்ட பணத்தை சாக்குகள், இரும்பு பெட்டிகளில் அள்ளி நிரப்பினர். கைப்பற்றப்பட்ட பணம் எண்ண முடியாத அளவுக்கு இருந்ததால் உடனடியாக மூன்று பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் ரூ.24 கோடி ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது. இதுதவிர பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வங்கி முதலீட்டு பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அங்கிருந்து தப்பியோட முயன்ற இன்ஜினீயர் பிரணாப் அதிகாரியை போலீஸார் கைது செய்தனர். தேடுதல் பணியின்போது போலீஸாரை தாக்க முயன்ற பிரணாபின் மகன் தமோயுவையும் கைது செய்தனர்.