இளநரை, இளம் வயதில் வழுக்கை போன்ற பிரச்சினை உடைய ஆண்களும், நீளமாகக் கூந்தல் இல்லாத பெண்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். இன்றைக்குக் கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் எல்லா வயதினரிடமும் அதிகரித்துவிட்டன.
உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதைக் கூந்தல் ஆரோக்கியத்தை வைத்து எளிதாகச் சொல்லிவிடலாம். உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தைக் கூந்தலுக்கும் அவசியம் கொடுக்க வேண்டும்.
இன்றைய வாழ்க்கை சூழலில் சுற்றுச்சூழல் மாசு, ரசாயனங்கள், மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால் கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்துக் கூந்தலை எப்படி ஆரோக்கியமாகப் பராமரிக்கலாம் என்று ஆலோசனை தருகிறார் தலை-கூந்தல் நிபுணர் சுபாஷினி:
ஒருநாள் விட்டு ஒருநாள் தலைமுடியை அலச வேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் தினமும் தலைமுடியை அலச வேண்டும்.
வாரத்தில் இரண்டு முறையாவது தலைக்கு எண்ணெய் வைக்கவேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், வாரத்துக்கு மூன்று தடவையாவது எண்ணெய் வைக்க வேண்டும்.
இரவு தூங்குவதற்கு முன், தலைக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயை மிதமாகச் சூடாக்கி தலையில் தேய்ப்பது நல்லது.
முடியைச் சீவுவதற்குப் பயன்படுத்தும் சீப்புகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மரத்தாலான சீப்பு முடியைச் சீவுவதற்குச் சிறந்தது.
ஹேர் பிரஷ்களைக் கொண்டு தலைசீவுவதைத் தவிர்க்க வேண்டும். கலவையான நுனிகளைக்கொண்ட சீப்புகளைப் பயன்படுத்தலாம். ஈரமான தலையில் சீப்பைப் பயன்படுத்தக்கூடாது.
தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் காரணத்தால் உருவாகும் பொடுகால்தான் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இது ஒரு வகைப் பூஞ்சையால் உருவாகிறது.
இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை தலைக்கு எண்ணெய் வைத்தால் போதும். பொடுகு நீக்கும் ஷாம்புவைப் பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களுக்கு மேல் பொடுகுத் தொல்லை தொடர்ந்தால் மருத்துவரை அணுகலாம்.
ஷாம்புவைப் பொறுத்தவரை சல்பேட் கலக்காத, அதிகம் நுரை வராத ஷாம்புகளைப் பயன்படுத்தலாம். மற்ற ஷாம்புவைவிட மூலிகை ஷாம்பு சிறந்தது.
lதினமும் ஷாம்புப் போட்டுக் குளித்துவிட்டால் கூந்தலைப் பராமரித்துவிட்டதாக அர்த்தம் கிடையாது. கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இரும்பு, புரதம், துத்தநாகம் போன்ற சத்துகள் உடலில் குறையும்போதுதான் கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்குப் புரதச்சத்து தேவை. அதற்காக முட்டை, பால், முளைகட்டிய பயிர்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். கீரை, காளான், வெள்ளரிக்காய், நெல்லிக்காய், அவல், திராட்சை, அத்தி, பச்சைக் காய்கறிகள் குறிப்பாகப் பீட்ரூட் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நாளில் கட்டாயமாக மூன்றிலிருந்து மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறு, நீர்ச்சத்து நிறைந்த உணவு வகைகள் என ஏதாவது ஒருவகையில் தண்ணீர் உடலில் சேருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இப்போது பெண்களுக்கு அதிகமாக முடி உதிர்வதற்கு, தொண்ணூறு சதவீதக் காரணம் ரத்தச் சோகைதான். மாதவிடாயின்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் பெண்கள் ரத்தச்சோகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ரத்தச் சோகை குணமாவதற்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு முடி உதிர்வதற்கான மற்றொரு காரணம் மன அழுத்தம். தினமும் இருபது நிமிடங்களாவது ‘உங்களுக்கே உங்களுக்கான’ நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இருபது நிமிடத்தில் உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவந்தால், அன்றாட வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தம் குறையும்.
பெண்களுக்கு முடி உதிர்வதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. தைராய்டு, நீரிழிவு, ‘பி.சி.ஓ.டி.’ (PCOD) எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களாலும் முடி உதிர்கிறது. ஏழு நாட்களுக்கு மேல் தாமதமாக மாதவிடாய் வந்தால், அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெற வேண்டும்.
இந்த ‘பி.சி.ஓ.டி.’ பிரச்சினை பெண்களிடம் இப்போது அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பெண்கள், மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்வதுடன் யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும். உணவுப் பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆண்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கை வருவதற்கான காரணம் ஆண்ட்ரோஜெனிக் அலோபிசியா (Androgenic Alopecia) என்னும் பிரச்சினை. இந்தப் பிரச்சினையால்தான் எழுபது சதவீத ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். இது மரபு வழியாகவும், சுற்றுச்சூழல் காரணமாகவும் ஏற்படுகிறது.
மேற்கண்ட ஆலோசனைகளைப் பின்பற்றினால் பெருமளவு தலைமுடியைப் பாதுகாக்கலாம்.