சீனாவில் அதிக பாரம் தாங்காமல் குதிரை வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரை ஒன்று இறந்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சினாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையை சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வசதியாக குதிரை வண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குதிரை வண்டியில் அதிக அளவு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்றதால் வழியிலேயே ஒரு குதிரை இறந்துவிட்டது. இந்த சம்பவம் குழந்தைகளின் மத்தியில் நடந்ததால், பல குழந்தைகள் அதிர்ச்சியுடன் அந்த குதிரையை பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சீனாவில் உள்ள சமூக வலைத்தளத்தில் மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினர் குதிரை ஓடிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த சீனாவின் வனவிலங்குகள் நல அமைப்பு ஒன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற விலங்குகள் வண்டிகளை தவிர்த்துவிட்டு, மிருகக்காட்சி சாலையை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு வேறு வாகனங்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.