ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கின் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம். சிபிஐ அதிரடி

pcஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அளித்த அனுமதி குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவரம் தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர்களுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி டில்லி நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. நீதிபதி ஓ.பி. சைனி பரிசீலனையில் உள்ள அந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய அளித்த அனுமதி குறித்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:

ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான மொரீஷியஸில் உள்ள குளோபல் கம்யூனிகேஷன்ஸ் ஹோல்டிங்ஸ் ரூ.4,800 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளது. இது குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் “இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ரூ.600 கோடி அளவுக்கான முதலீடுகளுக்கு மட்டும் மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளிக்க அதிகாரம் பெற்றுள்ளார். அதற்கு மேலான முதலீடுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைதான் ஒப்புதல் அளிக்க முடியும். ஆனால், ஏர்செல் – மேக்சிஸ் விவகாரத்தில் எந்த அடிப்படையில் சிதம்பரம் ஒப்புதல் அளித்தார் என்பதை சிபிஐ விசாரித்து வருகிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply