நான் கேட்கும் தொகுதிகளை கொடுக்காவிட்டால் பிரச்சாரம் செய்ய மாட்டேன். ப.சிதம்பரம்
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக திமுக தலைமை கூறியுள்ள நிலையில், அதில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகளை ப.சிதம்பரம் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கேட்பதாகவும், தான் கேட்கும் தொகுதிகளை வழங்காவிட்டால் பிரச்சாரம் செய்ய வரமாட்டேன் என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச இளங்கோவன் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழுவில் ப.சிதம்பரமோ, அவரது ஆதரவாளர்களோ இடம்பெறாததால், ப.சிதம்பரம் நேற்று முன்தினம் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் இந்த ஆலோசனையில் திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, கோபிநாத், வசந்தகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் அவர் பிரச்சாரம் செய்ய வரமாட்டார் என்று முடிவு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 2006, 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக கூட்டணியின் மிக முக்கியமான பேச்சாளராக இருந்த ப.சிதம்பரம் இம்முறை தான் கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என கூறியிருப்பது காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.