ரஜினியால் விஷாலுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி ஒருசில விநியோகிஸ்தர்கள் போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே. ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, நஷ்டம் அடைந்த விநியோகிஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. ஆனால் இந்த நஷ்ட ஈடு தங்களுக்கு முறையாக வந்து சேரவில்லை என லிங்கா படத்தின் வட ஆற்காடு, தென்னாற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியா விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறிவந்தனர். இதற்கு லிங்கா படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற வேந்தர் மூவீஸ் நிறுவனமே காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘பாயும் புலி’ திரைப்படம் வரும் 4ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. ஆனால் வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் ‘பாயும் புலி’ படத்தை NSC என்று கூறப்படும் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாவில் ரிலீஸ் செய்ய திரையரங்கு உரிமையாளர்கள் தடை வித்தித்துள்ளனர். இந்த தடைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லிங்கா படத்தின் பிரச்சனைக்காக ‘பாயும் புலி’ படத்திற்கு தடை விதிப்பது எந்த விதத்திலும் தொழில் தர்மம் இல்லை என்றும் உடனடியாக தடையை நீக்காவிட்டால் ஜனநாயக முறைப்படி இதுகுறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்துள்ளது.