பாபநாசம் படத்திற்கு திடீர் சிக்கல்? திட்டமிட்டபடி ஜூலை 3ல் ரிலீஸ் ஆகுமா?
கமல்ஹாசன் நடித்த படங்கள் என்றாலே பிரச்சனைகள் இல்லாமல் ரிலீஸ் ஆனால் அதுதான் உலகின் எட்டாவது அதிசயம். விருமாண்டி முதல் உத்தம வில்லன் வரை அவர் சந்தித்த சவால்கள் ஏராளம். அவரது படங்கள் வெளியாகும் கடைசி நேரத்தில் திடீர் திடீரென திருப்பங்கள் ஏற்பட்டு படத்திற்கு தடை ஏற்பட்டு வரும் நிலையில் ஜூலை 3ஆம் தேதி ரிலீஸாகும் என முடிவு செய்யப்பட்டுள்ள ‘பாபநாசம்’ படத்திற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் திரைப்படம் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட ஒருசில சிக்கலை தவிர்ப்பதற்காக அவர் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இன்னுமொரு படத்தை ரூ.30 கோடியில் நடித்துத்தர ஒப்புக்கொண்டதாகவும் அந்த படத்தை உத்தம வில்லன் விநியோகிஸ்தர்கள் அனைவருக்கும் தருவதாகவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒப்புக்கொண்டபடி இன்னும் அந்த படத்தின் ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால் உத்தம வில்லன் பட விநியோகஸ்தர்கள் பாபநாசம் படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பேசிவருதாக கூறப்படுகிறது.
எனவே பாபநாசம் படம் வெளியாகுமா இல்லையா என்பது பற்றி குழப்பம் எழுந்துள்ளதாம். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் இன்று அல்லது நாளை இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் பாபநாசம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.