பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் நேற்று சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. புதுச்சேரி – திண்டிவனம் சாலை பஞ்சவடீயில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மூலவர் ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் மற்றும் பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர், மூலவர் ஆஞ்ஜநேயர் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.கடந்த 28ம் தேதி, மூல நட்சத்திரத்தை முன்னிட்டு நடக்க இருந்த பால் அபிஷேகமும் சேர்த்து நேற்று நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.