பாடி, திருவலிதாயம் கோவிலில் நடந்த குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையில், ஏராளமான பக்தர்கள் குரு அருள் பெற்றனர். பாடியில் உள்ள, பாடல் பெற்ற குரு ஸ்தலமான ஜெகதாம்பிகை உடனுறை திருவலிதாயம் கோவிலில், குரு பெயர்ச்சி விழா நடந்து வருகிறது. மன்மத ஆண்டில், நேற்று இரவு, 11:02 மணியளவில், கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு, குரு பெயர்ச்சி நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் முதல், கோவிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா நடந்தது. சென்னையின் குரு ஸ்தலமான இங்கு, சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன், நேற்று காலை முதல் நடந்த லட்சார்ச்சனை விழாவில் கலந்து கொண்டு, குரு அருள் பெற்றனர். இன்று (6ம் தேதி) காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, குரு பரிகார ஹோமம் நடக்கிறது. குரு பெயர்ச்சியை ஒட்டி ரிஷபம், மிதுனம், சிம்மம், கடகம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய, ஏழு ராசிக்கு உரியவர்களும் லட்சார்ச்சனை செய்ய, 400 ரூபாயும், குரு பரிகாரம் செய்ய, 1,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குரு ஸ்தலம், ஆலங்குடி, தென்குடி திட்டை, திருச்செந்துார் போன்ற முக்கிய குரு ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.