‘பத்மாவத்’ திரைவிமர்சனம்
ஒரு அரசன் ஒரு பெண் மீது அதிலும் மாற்றான் மனைவி மீது ஆசைப்பட்டால் என்ன ஆகும் என்பதை நாம் இராமாயணம் காலத்திலேயே படித்திருக்கின்றோம். அதே கதைதான் இந்த பத்மாவத் படத்தின் கதை
ராஜபுத்திர அரசனான ஷாஹித் கபூர், வேட்டையாட சென்ற இடத்தில் தீபிகாவிடம் மனதை பறிகொடுக்கின்றார். இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. இந்த சமயத்தில் துரோகம் செய்யும் ராஜகுருவை நாடு கடத்துகிறார் அரசர்.
நாடு கடத்தப்பட்ட ராஜகுரு நேராக ராஜபுத்திர அரசுக்கு எதிரியாக இருக்கும் அலாவுதின் கில்ஜியிடம் சென்று பத்மாவதியின் அழகை வர்ணிக்கின்றார். இதனால் மோகம் கொள்ளும் அலாவுதீன், பத்மாவதியை அடைய அந்நாட்டின் மீது போர் தொடுத்து வஞ்சகத்தால் அரசனை கடத்தி வருகிறார்.
பத்மாவதி வந்தால் அரசரை விடுதலை செய்வதாக நிபந்தனை விதிக்கும் அலாவுதின் கில்ஜியை சந்திக்க பத்மாவதி சென்றாரா? அரசரை மீட்டாரா? என்பதுதான் மீதிக்கதை
பத்மாவதி கேரக்டராக தீபிகா நடித்துள்ளார் என்று சொல்வதைவிட அந்த கேரக்டராகவே மாறி வாழ்ந்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். அளவான வசனங்கள், அளவற்ற நடிப்பு, கச்சிதமான காஸ்ட்யூம், சுற்றிசுழலும் நடனம், இறுதியில் தீயில் விழுந்து உயிரை இழக்கும் தியாகம் என படம் முழுவதும் தீபிகாவின் நடிப்பு கண்முன்னே நிற்கின்றது.
ஷாஹித் கபூர் ராஜபுத்திர அரசனாகவும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் கபூரும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக இருவரும் சந்திக்கும் ஒருசில காட்சிகளில் இருவரில் யார் நடிப்பு சிறந்தது என்பதை கணிக்கவே முடியாது.
முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் எந்த இடத்திலும் போரடிக்காத திரைக்கதைக்கு சஞ்சய் லீலா பன்சாலியை பாராட்டலாம். ஒளிப்பதிவு, காஸ்ட்யூம், எடிட்டிங், பின்னணி இசை, பிரமாண்டம், போர்க்காட்சிகள், 3D காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக இருப்பதால் இந்திய சினிமா வரலாற்றில் இந்த படம் ஒரு மைல்கல் என்றே கூறலாம். அனைவரும் குறிப்பாக இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்
ரேட்டிங்: 4.25/5