கார்த்தி மற்றும் நாகார்ஜுனா முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ள திரைப்படம் ஒன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகவுள்ளது. இந்த படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் திடிரேன அந்த படத்தில் இருந்து விலகியதாகவும், அதன் காரணமாக படத்தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க மறுத்த கேரக்டரில் தமன்னா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தேதி ஏற்கனவே திட்டமிட்டபட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் அவசர அவசரமாக படக்குழுவினர் தமன்னாவை நடிக்க மாற்று ஏற்பாடு செய்துள்ளதாகவும், எனவே படப்பிடிப்பு திட்டமிட்டவாறு நடைபெறும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
தமன்னா ஏற்கனவே கார்த்தியுடன் ‘பையா’ என்ற வெற்றி படத்தில் நடித்துள்ளார். அந்த வெற்றி இந்த படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமன்னா தற்போது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, பாஹுபாலி, பெங்கால் டைகர் போன்ற படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நிலையிலும் தனது கால்ஷீட்டை அட்ஜெஸ்ட் செய்து இந்த புதிய படத்திற்கு வழங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.