பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வு

murali

சென்னையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு மூளையில் திறந்த நிலை அறுவைச் சிகிச்சை இன்றி நவீன முறையில் சிகிச்சை அளித்து மியாட் மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.

இது தொடர்பாக நரம்பியல் மருத்துவ நிபுணர் கிருஷ்ணன் பாலகோபால், கதிரியக்க சிகிச்சை நிபுணர் முரளி ஆகியோர் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“”சென்னையைச் சேர்ந்த கலாவதி (43), சீனிவாசராவ் (44) ஆகியோர் பக்கவாதத்தால் அண்மையில் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வீட்டிலிருந்தபோது கலாவதி திடீரென மயக்கம் அடைந்து நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். ஏற்கெனவே இதய வால்வில் கலாவதிக்கு பிரச்னை இருந்ததால் கழுத்து வழியே மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டது. இதனால் நினைவிழந்து அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது என்பது சிறப்பு சி.டி. ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து காரணமாக சீனிவாசராவுக்கு மூளை ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்து பக்கவாதம் ஏற்பட்டது தெரியவந்தது.

நவீன சிகிச்சை என்ன?

இவ்வாறு ரத்தம் உறைந்து மூளை ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் நிலையில் அடைப்பை அகற்ற “த்ராம்பக்டமி’ என்ற நவீன திறந்த நிலை அறுவைச் சிகிச்சை மியாட் மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சிகிச்சையில் “ஸ்டென்ட் ரெட்ரிவர்’ என்ற சிறிய சாதனம் மூலம் மூளை ரத்தக் குழாயில் உள்ள அடைப்பு அகற்றப்பட்டு ஸ்டென்ட்டும் வெளியே எடுக்கப்பட்டு விடும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கலாவதி, சீனிவாசராவ் ஆகிய இருவருக்கும் இந்த நவீன சிகிச்சை முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பி தற்போது நலமாக உள்ளனர்.

முக்கிய அறிகுறிகள் என்ன?

முகத்தின் ஒருபுறம் கீழே இறங்குதல், கைகளை மேலே தூக்க முடியாத நிலைமை, பேச்சு குழறுதல் ஆகியவை பக்கவாத பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்படும் நிலையில், பாதிப்புக்குள்ளானவரை மூன்று மணி நேரத்துக்குள் நரம்பியல் மருத்துவ நவீன சிகிச்சை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம். தாமதிக்காமல் இருந்தால் மூளை ரத்தக் குழாய் பாதிப்பைத் தடுத்து நோயாளிக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

Leave a Reply