நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து அமைச்சர்களாக பதவி வகிக்கும் பலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மாட்டுகறி, யோகா தினத்தில் சூரிய நமஸ்காரம் போன்ற தலைப்புகளில் சர்ச்சைக்குரிய கருத்தை கூறி பின்னர் வாங்கிக்கட்டிக்கொள்ளும் அமைச்சர்கள் மத்தியில் தற்போது இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானும், வங்காளதேசமும் இந்து நாடுகளே என்ற சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரா நகரில் நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய பகவத் கூறியதாவது:
“ ஒரே இந்து நாடு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இந்தியா என்பது இந்து நாடுதான்.அதை எந்த விலை கொடுத்தாலும் மாற்ற முடியாது. சில மக்கள் தங்களை இந்துக்கள் என சொல்கின்றனர். சிலர் இந்தியன் என சொல்கின்றனர். இன்னும் சிலர் தங்களை ஆரியர்கள் என்றும், சிலர் உருவ வழிபாட்டில் நம்பிக்கையற்றவர்கள் எனவும் கூறிக்கொள்கின்றனர். இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று ஏற்றுக் கொண்டாலும் எந்த மாற்றமும் இதில் ஏற்படாது.
இந்திய துணைக்கண்டத்தில் வாழும் அனைவருமே இந்துநாட்டைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வேறுபட்ட குடியுரிமையை கொண்டிருந்தாலும் அவர்களுடைய நேஷனாலிட்டி இந்துதான். சிந்து நதி இங்கு ஓடியதால் அரபு மன்னர்கள் இந்த பகுதியை இந்து என அழைக்க தொடங்கினர். பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து பிரிக்கப்பட்டது. 1971 ல் வங்காளதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள மக்களின் குடியுரிமை மாறுவதற்கு நாடு பிரிக்கப்பட்டதே காரணம். ஆனால், அவர்கள் தங்கள் வீடுகளையே, நாடுகளையோ விட்டு செல்லவில்லை. எனவேதான் அவர்களின் நேஷனாலிட்டி இன்னும் மாறவில்லை என்று நான் கூறுகிறேன். சில மக்கள் தெளிவில்லாமல் தங்களை கிறிஸ்தவர்கள் என்றும், முஸ்லீம்கள் எனவும் கூறிக்கொள்கின்றனர். இந்த நிலப்பரப்பின் பழங்கால பெயர் இந்துஸ்தான். வெளிப்படையாகவே இங்கு வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்துக்களே” என்று கூறினார்.
மேலும், அவர் நமக்கு சாதகமாக இருக்கும் இந்த சூழலை பயன்படுத்தி, நமது அமைப்பின் சித்தாந்த கொள்கைகளை பரப்புவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.