பாகிஸ்தானில் நேற்று இரண்டு சர்ச்சுகளில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாகவும் 80 பேர் காயமடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவிகளைக் குறி வைத்து நடத்திய இந்தத் தாக்குதல் கோழைத்தனமான செயல் என்றும் இதுபோன்ற தாக்குதலை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத் தலைநகர் லாகூரின் யோஹானாபாத் என்ற பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திலும், கிறைஸ்ட் தேவாலயத்திலும் நேற்று தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான ஜமாத்-உல்-அஹ்ரார் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் இருவர் பொதுமக்களிடம் பிடிபட்டனர். அவர்கள் மீது கடும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இருவரது உடல்கள் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொன்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது, இருவரும் உயிரோடு எரிந்து துடிதுடித்தபடியே மரணம் அடைந்தபோது, பொதுமக்களை அங்கிருந்த காவல்துறையினர் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.
காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பயங்கரவாதிகள் சுமார் 5 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர் என்று தெரிய வந்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.