பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரப்பை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் அவர்களுக்கு வெளிநாடு செல்லவிருந்த தடை சமீபத்தில் விலக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார். இந்நிலையில் அவர் மீது நடைபெற்று வரும் தேசத்துரோக வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவரை தலைமறைவானர் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதோடு அவரை 30 நாட்களுக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் வரும் ஜூலை 12-ந் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த 1999ஆம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்த ஜெனரல் பர்வேஸ் முஷரப் பின்னர் 2008 வரை அதிபர் பதவியை வகித்தார். பதவி இழந்தவுடன் துபாய்க்கு தப்பி சென்ற பர்வேஸ் மீண்டும் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது நாடு திரும்பினார். அப்போது முஷரப்புக்கு எதிராக தேசத்துரோக வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.