பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின்னணியில் செயல்பட்டதாக கருதப்படும் ஜெயிஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக மீடியா செய்திகள் வெளியாகியுள்ளது.
அவருக்கு நெருக்கமானவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மீடியா செய்திகள் வெளியாகியுள்ளது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பலரை பாகிஸ்தான் இன்று கைது செய்துள்ளதுடன், அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பதான்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில், மவுலானா மசூத் அசார் பின்னணியில் செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள இந்தியா, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இரு நாடுகளுக்கு இடையிலான வெ ளியுறவுத்துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடக்கும் என மத்திய அரசு கண்டிப்புடன் கூறியுள்ளது. பதான்கோட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 7 பாதுகாப்பு வீரர்கள் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம், பிரதமர் மோடி நேரடியாக வலியுறுத்தினார்.
முன்னதாக, 2001ல் பார்லிமென்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான மவுலானா மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கூறியபோது, இதனை ஏற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது.