இந்து கோவில் இடங்களை அபகரிக்க பாகிஸ்தான் பணமுதலைகள் திட்டமா?
பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்துக் கோவில்களுக்கு சொந்தமான இடங்களை பணம் படைத்த பெருமுதலைகள் அபகரிக்க திட்டமிட்டு உள்ளதாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ரீமா அப்பாஸி தெரிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எழுத்தாளர் ரீமா அப்பாஸி என்ற பெண் எழுத்தாளர் மேற்கு வங்க மாநில தலைநகர், கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியபோது, ”இந்துக் கோவில்கள் பாகிஸ்தான் நகரில் முக்கிய இடங்களில் உள்ளதால், ஹோட்டல்கள் அல்லது வணிக வளாகங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்காக அந்த இடங்களை அபகரிக்க பணம் படைத்த பெருமுதலைகள் திட்டமிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்நாட்டுப் போரின்போது, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்த மக்கள், தங்களின் சொத்துகளை மீட்க முயற்சித்து வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள இந்துக் கோவில்களை முறைப்படி பராமரிக்கின்றனர். அவற்றை அரசு கவனித்துக் கொள்கிறது. ஆனால், பழங்காலத்து கைவினைக் கலைஞர்கள் அங்கு இல்லாததால், அவற்றை முழுமையாக புதுப்பிக்க இயலாமல் உள்ளது” என்று கூறியுள்ளார். ஆனால் இந்து கோவில்களை அபகரிக்க திட்டமிட்டுள்ள பணமுதலைகளின் பெயர் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.