இந்திய வரைபடத்தை தவறாக சித்திரித்தால் 7 ஆண்டு சிறை. ரூ.100 கோடி அபராதம். விரைவில் மசோதா தாக்கல்

இந்திய வரைபடத்தை தவறாக சித்திரித்தால் 7 ஆண்டு சிறை. ரூ.100 கோடி அபராதம். விரைவில் மசோதா தாக்கல்
india
இந்திய வரைபடத்தில் காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேஷ் பகுதிகளை பாகிஸ்தான் மற்றும் சீனா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு ‘புவியமைப்பு தகவல் ஒழுங்குமுறை மசோதா 2016’ என்ற பெயரில் ஒரு வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது

இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டால், இந்திய எல்லை வரைபடத்தை தவறாக சித்திரிக்கும் தனி நபர் அல்லது அமைப்புக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனையும் ரூ.100 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். இந்த மசோதாவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மசோதாவை தடுத்து நிறுத்த ஐ.நா.சபைக்கு பாகிஸ்தான் கடிதமும் எழுதியுள்ளது.

இந்தக் கடிதத்தில், “ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி ஜம்மு காஷ்மீர் பகுதியை பிரச்சினைக்குரிய பகுதியாக சித்திரிப்பவர்களை தண்டிக்க இந்திய அரசு புதிய மசோதா கொண்டுவர முயற்சிப்பது கவலை அளிப்பதாக உள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. எனவே, இந்திய வரைபடம் தொடர்பாக சட்ட மசோதா கொண்டுவர திட்டமிட்டிருப்பது முற்றிலும் உள்நாட்டு விவகாரம். எனவே, இதில் தலையிட பாகிஸ்தான் உட்பட எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை.

காஷ்மீர் பிரச்சினைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பை ஈடுபடுத்த அந்த நாடு தொடர்ந்து முயன்று வருகிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

Leave a Reply