இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் நேற்று அத்துமீறி தாகுதல் நடத்தியது. இந்த தாக்குதலை முறியடித்து பாகிஸ்தான் ராணுவத்தினர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த தாக்குதலில் இரண்டு இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்திய எல்லையில் உள்ள ஆர்.எஸ். புரா என்ற பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர், இன்று அதிகாலை 2 மணியளவில் மீண்டும் கடும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர்களை விரட்டியடித்தனர். ஆனாலும், இந்த மோதலில் 2 இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளார்கள். காயமடைந்த ராணுவ வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாகிஸ்தான் தரப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் தெரியவில்லை.
நாளை உலகின் மிக உயர்ந்த ராணுவ நிலையான சியாச்சின் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி, செல்ல உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால், பிரதமர் வருகை தரும் பகுதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பை பார்வையிடுவதற்கு, ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங், சியாச்சின் பகுதியில் இன்று முகாமிட்டுள்ளார்.