ஜோர்டானிடம் இருந்தும் போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கக்கூடாது. அமெரிக்கா
பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க செனட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பாகிஸ்தான், ஜோர்டானில் இருந்து பழைய எப்-16 ரக போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது: பிற நாடுகளிடமிருந்து பயன் படுத்தப்பட்ட எப்-16 ரக போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எங்கள் நாட்டு சட்டப்படி, அமெரிக்காவில் தயாரான ராணுவ தளவாடங்களை மூன்றாம் தரப்புக்கு வழங்கினால் எங்களிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். அதேநேரம் அந்த ராணுவ தளவாடம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க எங்களுக்கு உரிமை உள்ளது.
எப்-16 ரக விமானங்களை வாங்க பாகிஸ்தான் எங்களுடன் ஒப்பந்தம் போட்டது. ஆனால் எங்களது சில நிபந்தனைகளை ஏற்க அந்த நாடு மறுத்துவிட்டது. இதனிடையே இந்த ஒப்பந்தம் மே 24-ம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அதிகாரியின் இந்த பேட்டியால் ஜோர்டாலும் இருந்தும் எப்-16 ரக விமானங்களை வாங்குவதில் பாகிஸ்தானுக்கு சிக்கல் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.