இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி கடந்த 3ஆம் தேதி பல்லேகெலேவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இலங்கையை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் கருணாரத்னே 130 ரன்களும், தரங்கா 46 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 66 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 63 ரன்கள் பின் தங்கியிருந்தது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி, 95.4 ஓவர்களில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 380 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி ஷான் மசூத் மற்றும் யூனிஸ்கான் ஆகியோர்களின் அபார ஆட்டத்தால் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 103.1 ஓவர்களில் 382 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிக்களுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரும் 11ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது.