லண்டன் மேயர் தேர்தலில் பாகிஸ்தான் பஸ் டிரைவரின் மகன் வெற்றி
செருப்பு தைப்பவர் அமெரிக்க அதிபர் ஆனதும், பஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆனதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான். இந்த வரிசையில் தற்போது பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகன் லண்டன் நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுவும் அவர் தோற்கடித்தது மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டில் மேயர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் லண்டன் நகர தேர்தலில் பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகனான சாதிக்கான்என்ற 45வயது நபர் தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெசிமாவின் சகோதரருமான ஸக் கோல்ட் ஸ்மித் போட்டியிட்டார். இவர் லண்டனில் வாழும் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பணி நேற்று நடைபெற்றது. இதில் 50%க்கும் மேலாக வாக்குகள் பெற்று சாதிக்கான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கிழக்கு லண்டனில் உள்ள டூட்டிங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்துவரும் சாதிக் கான், மனித உரிமைகள் துறை வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் தலைமையிலான மந்திரிசபையில் செல்வாக்கு நிறைந்தவராக அறியப்பட்ட இவர், லண்டன் நகர மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து விலகினார். லண்டன் நகரின் மேயராக பொறுப்பேற்றுக்கொள்ளும் முதல் இஸ்லாமியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.