பக்தனுக்காக சபதம் மீறிய கண்ணன்!

11885185_943190819075772_1297689856544072546_n

மகாபாரதப் போர் முடிந்தது. கிருஷ்ணன் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார். “ஸ்வாமி, தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள். இந்தப் பாவத்துக்கு நானும் காரணமாகிவிட்டேன். பாவம் போக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
இதற்கு பீஷ்மரே சரியானவர் என்று கூறி அவரிடம் அழைத்துச் சென்று, வந்த விவரத்தைச் சொன்னான் கண்ணன்.
பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்…
“ஏன் புது தெய்வத்தைத் தேடி வந்திருக்கிறாய்…? உன் அருகில் நிற்கிறானே கண்ணன்…. அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள்…
பத்தாவது நாள் யுத்தம். நான் கெüரவ சேனைக்குத் தலைமை தாங்கிப் புறப்படுகிறேன். அப்போது துரியோதனன் வந்தான். “ஓய் பாட்டனாரே! உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன், மகா பலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே… உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே.. நீர் கபடம் செய்கிறீர். எனக்குத் துரோகம் செய்கிறீர். இந்தப் பத்து நாள் யுத்தத்தில் நம் சேனைகளுக்குக் கடும் சேதம். இத்தனைக்கும் நீர் சேனாபதி. நாம் தோற்பதற்குக் காரணம் நீர். உமக்கு பாண்டவர்கள் மேல் பரிவு இருக்கிறது. உம் பிரிய பேரன்மார் பாண்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில் ஒன்றும் செய்யாமல் வந்துவிடுகிறீர்… உமக்கு இருப்பது பாண்டவர் மீதான பரிவு’ என்று சொல்லி என்னைத் திட்டினான்.
“அஸ்தினாபுரத்தைக் காப்பேன்’ என்று என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காத்து வரும் எனக்கு இப்படி ஒரு அவச்சொல் கேட்க சகிக்கவில்லை. அவன் சொன்ன வார்த்தைகளைச் சகிக்க மாட்டாமல் அவனிடம் ஒரு சபதம் செய்தேன். “இன்றைக்கு பாண்டவர்களுக்கும் கெüரவர்களுக்கும் நடக்கும் யுத்தத்தில் என்ன நடக்கிறது பார்.. நான் செய்யும் கோர யுத்தம் தாங்காமல், இந்தப் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று சபதம் செய்த கிருஷ்ணனையே ஆயுதம் ஏந்தச் செய்கிறேன் பார்’ என்று அவனிடம் சபதம் செய்தேன்.
அப்படியே நான் போர்க்களத்துக்கு வந்த வேகத்தில், துரியோதனன் நாவினால் என்னைச் சுட்ட வடு ஏற்படுத்திய கோபம்… வெறியோடு யுத்தம் செய்தேன். எதிரில் வந்தான் கண்ணன் அர்ஜுனனுடன்! அவன் மீது அம்பை எய்தேன். அவனை மட்டுமா அடித்தேன். விஷ்ணு பக்தனான நான் கண்ணனுக்கு சந்தனாபிஷேகம் செய்து திருப்பாதங்களைக் கழுவ வேண்டாமா..? அந்தப் போர்க்களத்தில் என்ன செய்தேன்…?
கண்ணன் மீது அம்பு பட்டு அவன் உடலிலிருந்து ஓடும் செங்குருதியால் அவன் பாதங்களை நனைத்து அபிஷேகம் அல்லவா செய்தேன். கிருஷ்ணனோ சிரித்துக் கொண்டிருந்தான்… ஆனால் நான் அடித்த அடியில் காண்டீபம் நழுவி மூர்ச்சையாகி விழுந்தான் அர்ஜுனன். பார்த்தான் கிருஷ்ணன். கையில் சக்ராயுதபாணியாக தேரிலிருந்து குதித்தான். அப்போது அவன் போட்டிருந்த மேல் வஸ்திரம் நழுவிக் கீழே விழுகிறது. அதைத் தாண்டிக் கொண்டு அவன் வருகிறான்.
நானோ, “அப்பா கிருஷ்ணா… அந்தப் பாவி துரியோதனன் போட்ட உப்பு போகட்டும். எனக்கு உன் சக்கரத்தால் மோட்சம் கிடைக்கட்டும்’ என்று சொல்லிக்கொண்டு எதிர்கொண்டேன்.
அப்போது மயக்கம் தெளிந்து எழுந்தான் பார்த்தன். கையில் சக்கரத்தோடு என்னை நோக்கி ஓடி வந்த கண்ணனைக் கண்டான். உடனே கண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு, “ஹே கிருஷ்ணா இந்தப் போரில் ஆயுதமெடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த நீ உன் சத்தியத்தை மீறலாமா?’ எனக் கேட்டான்.
கண்ணன் சொன்னான்…. “என் சத்தியம் கிடக்கட்டும்… நீ செய்த சத்தியத்தை நான் காக்க வேண்டாமா? கிருஷ்ணன் பாதத்தில் நான் தஞ்சம்… அவன் என்னைக் காப்பான் என்றாயே… இப்போது இந்தக் கிழவன் உன் கதையை முடித்து விடுவான் போலிருக்கிறதே… நீ செய்த சத்தியத்தைக் காக்க என் சத்தியம் போனால் பரவாயில்லை…’ என்று சொன்னான்.
அவர்கள் இருவர் பேசுவதும் என் காதில் விழுகிறது. உண்மையில் தர்மா… கிருஷ்ணன் தன் சத்தியத்தை மீறுவதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை. அர்ஜுனன் சத்தியத்தைக் காப்பதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை. காலையில் துரியோதனனிடம் நான் செய்தேனல்லவா ஒரு சத்தியம்… இன்று போர்க்களத்தில் கிருஷ்ணனையே ஆயுதம் எடுக்க வைக்கவில்லை என்றால் நான் கங்கையின் புத்திரன் இல்லை என்று. என்னுடைய அந்த சத்தியத்தைக் காப்பதற்காக, எனக்காக என் பிரபு ஆயுதம் எடுத்தான்..” என்றார் பீஷ்மர் கண்களில் நீர் தளும்ப…

Leave a Reply