அதர்மங்கள் தலை தூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக அவதரித்தவர் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு பகவான், அவரது அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தில் அர்ச்சுனனுக்கு கண்ணன் உரைத்த கீதா உபதேசம் இந்துக்களின் புனித நூலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரதப் போருக்காக யுத்த களத்திற்குச் சென்ற நிலையில், அங்கு தனது உறவினர்களையும், ஆசானையும் எதிர்த்து நிற்கும் நிலை வந்து விட்டதை எண்ணி அர்ச்சுனன் கலங்கினான். அவனுக்கு உபதேசம் அளிக்கும் வகையிலேயே, யுத்த களத்தில் நின்றுக் கொண்டு அர்ச்சுனனுக்கு கீதா உபதேசத்தை போதித்தான். சத்திரியன் என்பவன் வீர மரணம் அடைவதற்காகவே பிறந்தவன். தர்மத்திற்காக சிலரை தாரை வார்க்க வேண்டியது சத்திரய தர்மம், எதிர் அணியில் இருப்பவர்கள் அண்ணன்-தம்பி என்றோ ஆசான் என்றோ உறவினர் என்றோ துளியும் எண்ணாமல் அவர்கள் நம்முடைய சத்ருக்கள் என்று நினைத்தே வீழ்த்த வேண்டும்.
இங்கே உறவு முறைகளுக்கு இடமில்லை. அதே நேரம் நம் பக்கத்தில் ஏற்படும் மரணத்தைப் பற்றியும் கண் கலங்கக் கூடாது என்று எச்சரிக்கும் தொனியுடன் பேசினான். இவ்வாறு யுத்த களத்தில் மரணம் ஏற்பட்டாலும் யாருக்காகவும் கலங்கி நிற்காமல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறிய கண்ணனும் கூட பாரதப்போர் நடைபெற்ற குருக்ஷேத்திரத்தில் ஒரு முறை கண் கலங்கி நின்றான் என்று வரலாறு கூறுகிறது. பாரத யுத்தம் வராமல் தடுக்க முதல் முயற்சி எடுத்தவனும் கண்ணன் தான், பிறகு யுத்தம் நடைபெற்றே தீர வேண்டும் என்று அதை நடத்தி வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கிக் காட்டியவனும் அவன்தான். யுத்தம் வேண்டாம் என்று கவுரவர்களிடம் கண்ணன் பேசிப்பார்த்து எந்த பயனும் இல்லை. பாண்டவர்களிடமும் இதேபோல் கண்ணன் பேசினான். அப்போது மிகுந்த கோபம் கொண்ட பீமனும் போர் வேண்டாம் என்றுரைத்தான். ஆனால் திரவுபதி கண்ணா! என் கூந்தல் கற்றையைப் பார்த்து எதுவாயினும் செய்! என்று கூறியதைத் தொடர்ந்துதான் தர்மத்தை நிலை நாட்டும் எண்ணத்தில் இந்தப் போரை கண்ணபிரான் ஏற்படுத்தினார்.
18 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற பாரதப்போரில் பதிமூன்றாம் நாளில் அர்ச்சுனனின் மகன் அபிமன்யு கவுரவர்களால் கொல்லப்பட்டான், அந்த இளம்பருவத்திலேயே அவன் வீர மரணம் அடைந்து மாண்டது அர்ச்சுனனை பெரிதும் கவலை கொள்ள வைத்தது, ஆனால் வேதனையை வெளிக்காட்டினால், கண்னன் கடிந்து கொள்வானே என்ற எண்ணத்தில் தனது சோகத்தை மறைத்துக் கொண்டு உள்ளம் வெதும்பியபடி தேரில் அமர்ந்திருந்தான். அதே நேரம் அவனுக்கு தேர் ஓட்டும் சாரதியாய் நின்றுக் கொண்டிருந்த கண்ணனும் கண் கலங்கினான். இதனை கவனித்து விட்ட அர்ச்சுனன் கண்ணனை அழைத்தபோது அவன் அர்ச்சுனனை திரும்பிப் பார்த்தான். அப்போது கண்ணனின் கண்களில் கண்ணீர் தாரையாக வழிந்தது. அதைக் கண்டு அர்ச்சுனன் ஆடிப் போனான். செய்வது அறியாது திகைத்து நின்ற அவன், பரம்பொருளே! மரணத்தின் தன்மை பற்றி எங்களுக்கு சொன்ன நீங்களா இப்படி கண்ணீர் விடுகிறீர்கள். இதுவரையில் நீங்கள் கண்ணீர் விட்டதே இல்லையே என்று அர்ச்சுனன் கேட்டான். அதற்கு கண்ணன் தர்மத்தை வெல்ல வைக்க நான் எதையும் தாங்கவும் எதையும் செய்யவும் சித்தமாக இருக்கிறேன் என்று கூறினான். மகாபாரதம் என்னும் போரில் கீதாச்சரம் என்ற வேதத்தை போதித்த கண்ணன் கண்ணீர் விட்டது அபிமன்யு மரணத்திற்காக மட்டுமே இறைவனும் மனிதருள் ஒன்றாக இருக்கிறான் என்பதே இதன் கருத்து. தெய்வமாய் இருந்தாலும் மானிட உருக்கொண்டால் தன்னை அறியாமல் கண்ணீர் வரும். ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்ச்சி அதிகமானால் தன்னாலேயே கண்ணீர் வரும் என்பதே இதன் கருத்து.