அமெரிக்க வாழ் தமிழரும், தகவல் தொழில்நுட்பப் பொறியாளருமான பழனி குமணன் புலனாய்வு இதழியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான புலிட்ஸர் விருதைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவர், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் ஆவார். தகவல் தொழில்நுட்பப் பொறியாளரான பழனி குமணன் “வால் ஸ்ட்ரீட்’ இதழின் கிராபிக்ஸ் குழுவில் இடம் பெற்றிருந்தார்.
“வால் ஸ்ட்ரீட்’ இதழ் கடந்த திங்கள்கிழமை, இதழியல் துறையில் உயரிய விருதான புலிட்ஸர் விருதை தனது புலனாய்வுத் திட்டமான “மெடிகேர் அன்மாஸ்க்ட்’டுக்குப் பெற்றது.
தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி செய்திகளை அளிப்பது குறித்துக் கண்டறிந்ததற்காக புலனாய்வு இதழியல் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசை, அந்த இதழின் கிராபிக்ஸ் குழுவில் இடம் பெற்றிருந்த மார்ட்டின் புர்ச், கிரிஸ் கேன்பி, மேட்லைன் பார்ஃப்மேன், ஜோன் கீகன், ஸ்டூவர்ட் தாம்சன் ஆகியோருடன் பழனி குமணன் பகிர்ந்து கொண்டுள்ளார்.